பக்கங்கள்

ஞாயிறு, 14 நவம்பர், 2010

விதி வரைந்த கோலங்கள்-பகுதி ..1


1. விதி வரைந்த கோலங்கள்-பகுதி ..1

மண்டையைப் பிளக்கும் அந்த உச்சி வெய்யில்… வேர்க்க விறு விறுவிறுக்க சயிக்கிலை மிதித்து மிதித்துக் களைத்துப் போய் வந்த பரமசிவமும்…. முற்றத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற அந்த மாமரத்தில் தன் சயிக்கிலைச் சாத்தி விட்டு… வெய்யிலின் அகோ ரம் தாங்க முடியாது… மேலே போட்டிருந்த அந்த சேட்டையும் கழற்றித் தோளில் போட்டவாறு வந்து… விறாண்டாவில் இருந்த கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டவரும்….

“கனகம்… கனகம்”… என அழைத்தார்.

குசினிக்குள் சமையலில் மூழ்கிக் கிடந்த கனகமும் …

” என்னப்பா வந்திட்டியளே”… எனக் குரல் கொடுத்த படியே வெளியே வந்தாள்.

“ஓம் கனகம்… தோட்ட அலுவலை முடிச்சுப் போட்டு… வாற வழியில இவன் புரோக்கனையும் பார்த்துக் கொண்டு வந்தன். ”

ஓ!…. என்னவாம் புரோக்கர்?… கனகம் வினாத் தொடுத்தாள்.

“பொறு கனகம் சொல்லுறன். அதுக்கு முதல்ல செம்பு நிறைய நல்ல குளிர் தண்ணியா கொண்டு வா பாப்பம்…. உச்சி பிளக்கிற வெய்யிலுக்கால வந்தது சரியான தாகமா இருக்கு”..

“ஏனப்பா… மோர் கரைச்சு கொண்டு வந்து தரட்டுமே? ”

“ம்… அதையும் தா. அதுக்கு முதல்ல நல்ல தண்ணி கொண்டு வா பாப்பம்”… என்று சொல்லவும்.. சரி என தலையை அசைத்த படி உள்ளே போன கனகமும்

“பிள்ள சாந்தி… அப்பாவுக்கு கொஞ்சம் மோர் கரை யம்மா. நல்லாக் களைச்சுப் போய் வந்திருக்கிறார்”…

என்று சமையல் கட்டுக்குள் சமைத்துக் கொண்டு நின்ற மூத்த மகள் சாந்தியிடம் சொன்னாள்.

“சரியம்மா…” என சொன்னபடி மோரைக் கரைத்து தாயிடம் கொடுத்தாள் சாந்தி.

மோரையும், ஒரு செம்பு நிறையத் தண்ணியையும் கொண்டு வந்த கனகமும் அதைக் கணவரிடம் கொடுத்தாள்….. தாகம் தீர அவற்றைக் குடித்து விட்டு…“கனகம் … அந்தக் கல்யாண விசயம் பற்றி… இவள் சாந்தியோட கதைச்சியே…?”

“இல்லையப்பா… அதைத் தீரவார மறந்தே போனன்.”

“உனக்கு வர வர மறதி நல்லாக் கூடித்தான் போச்சு கனகம்… இப்பவே உனக்கு அரள பேந்திட்டுதா என்ன? என சூடாகக் கேட்டார் பரமசிவம்…

“ஏனப்பா அதுக்குப் போய் இப்ப கத்திறியள்?… இப்பவே பிள்ளேட்ட கேட்டாப் போச்சு… என்னவாம் புரோக்கர் அத முதல்ல சொல்லுங்கோவன்?”… என்றாள்.

“ம்… நல்ல செய்திதான் கனகம்…. இந்தா பார்… மாப்பிளேட போட்டோவும் தந்திருக்கிறார்”…

என்றபடி எம்பலப்புக்குள் இருந்த அந்த 3 போட்டோ வையும் எடுத்து கனகத்திடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்த கனகமும்…

“ம்… மாப்பிள நல்லாத்தான் இருக்கிறார்… என்னப்பா?”… என்றாள்.

“ம்… மாப்பிள நல்லாத்தான் இருக்கிறார். முதல்ல இவள் சாந்திக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா எண்டு ஒரு சொல்லு கேக்க வேண்டாமே கனகம்?”….

அவள் யார் பிள்ளையப்பா? நாங்கள் வளர்த்த பிள்ள தானே!… நாங்கள் சொன்னால் வேண்டாம் எண்டா சொல்லப் போறாள்?”….

“சீச்சீ… அப்படி எல்லாம் சொல்லாத கனகம். எதுக்கும் பிள்ள சாந்தியிட்டயும் ஒரு வார்த்தை கேட்டு விடுவம்”… என்று சொல்லவும்…

“சாந்தி!… பிள்ள சாந்தி!… இஞ்ச ஒருக்கா வா மகள்… அப்பா உன்னைக் கூப்பிடுறார்”…

குசினிக்குள் சமைத்துக் கொண்டிருந்த சாந்தியும் கையை அலம்பிக் கொண்டு..

“என்னம்மா கூப்பிட்டியளே”…

“ஓம் பிள்ள… இஞ்ச கொஞ்சம் வாவன். இவன் புறோக்கன்… ஒரு கல்யாண விசயமா என்னைத் தேடி வந்தான். மாப்பிள வெளி நாட்டில இருக்கிறாராம். மாப்பிள்ளை வீட்டுக்காரர் இங்க நல்ல ஒரு பெண்ணாத் தேடினமாம் எண்டு… என்னட்ட கேட்டு வந்தான். நானும் அந்தக் குறிப்பை வாங்கிக் கொண்டு போய் எங்கட சாத்திரீட்ட காட்டிப் பாத்தன். குறிப்பு நல்ல பொருத்தமா இருக்கு என்று சாத்திரியும் சொல்லுறார். உனக்குப் பிடிச்சிருக்கா எண்டு பாத்துச் சொல்லு சாந்தி… பிடிச்சிருந்தால் மேல் கொண்டு கதைப்பம்.”… என்றார் பரமசிவம்.

தாயிடமிருந்து போட்டோவை வாங்கிப் பார்த்த சாந்தியும்…

“அப்பா!… வெளி நாட்டு மாப்பிள்ளையா? எதுக்கப்பா இவ்வளவு தூரத்தில பாக்கிறீங்கள்? எனக்கு… உங்கள, அம்மாவை, தங்கச்சிமாரை எல்லாம் விட்டு தூரமாப் போக விருப்பமில்லப்பா. இங்கேயே யாராவது ஒருவரா பாருங்கோ. என் கண் முன்னாலேயே உங்களையும் பார்த்துக் கொண்டு நானும் வாழ்ந்திடுவன்”…

“ஏன் சாந்தி அப்படிச் சொல்லுறாய்..? எங்களுக்கு மட்டும் உன்னைத் தூரமா அனுப்ப விருப்பமா என்ன? இந்த நாடு இருக்கிற நிலையில…. இங்க இருந்து நிம்மதியாவா வாழ முடியும்? ஏதோ நீயும் வெளிநாடு போய் நல்லா இருந்தியெண்டால்… நாளைக்கு உன் தங்கச்சிமாரும் கூட ஒரு நல்ல நிலைக்கு வந்திடு வாளுகள். நீங்கள் எல்லோரும் சந்தோசமா இருக்கிறதப் பார்த்துக் கொண்டே நானும் நிம்மதியா கண்ண மூடிடுவன்.”….

வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் சாதாரணமாக எந்தப் பெற்றோருக்கும் இருக்கக் கூடிய ஆசையும், தவிப்பும் பரசிவத்துக்குள்ளும் குடிகொண்டிருந்தது.

இடையே குறுக்கிட்ட கனகமும்….

“ஓம் சாந்தி!… அப்பா சொல்லுறதில ஞாயம் இருக் கம்மா. நல்ல இடம் வேற. பொருத்தமும் நல்லாப் பொருந்தி இருக்கிறதால…. இதை நீ வேண்டாம் எண்டு சொல்லாத சாந்தி”….. என தன் பங்குக்கு தாயும் சொல்லி முடித்தாள்.

தாயும் தந்தையும் ஒரே தீர்மானத்தில் இருந்த போதும் சாந்திக்கு எல்லோரையும் விட்டுப் பிரிந்து போவதை நினைத்துப் பார்த்த போது மிகவும் வேதனையாகவே இருந்தது. ஆனாலும் பெற்றோர்களின் வார்த்தையை யும், அவர்கள் விருப்பத்தையும் தட்டாமல்…

“சரி அப்பா,… சரி அம்மா… உங்கள் விருப்பம் எதுவோ அதுபோலவே செய்யுங்கோ.”… எனக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

அன்று இரவு முழுவதும் சாந்திக்குத் தூக்கமே வர வில்லை. எல்லோரையும் விட்டுப் பிரியப் போவதை நினைத்து சோகம் ஒரு புறமுமாய்… வரப் போகும் கணவன் எப்படி இருப்பானோ?… என்ற பயம் ஒரு புறமுமாய்… கல்யாண ஆசைகள் ஒரு புறமுமாய்… பருவத்தின் துடிப்புகள் துடித்து எழுந்து அடி வயிற்றில் ஏதோ பறப்பதாய் ஒரு மெல்லிய உணர்வு… இப்படி எல்லாமே அவள் தூக்கத்தையே கலைத்து நிற்க…. அவளின் சிந்தனைகள் யாவும் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின.





விதி தொடரும் .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக