பக்கங்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010


நாள் தோறும் வெய்யிலில் நின்று தோட்ட வேலை செய்து கஷ்ரப்படும் தந்தை… தந்தையின் வருமானம் போதாமல் கடைகளிற்கு பலகாரம் செய்து கொடுத்து, அடுப்பு வெக்கையில் தினமும் உருக்கிப் போய் இருக்கும் தாயின் முகமும்… தினசரி இடியப்பம் பிழிந்து பிழிந்து மரத்துப் போன அவளின் கையும்…

சின்னச் சின்ன ஆசைகளை நெஞ்சுக்குள்ளே சுமந்து கொண்டு, வறுமையின் பிடிக்குள் அகப்பட்டு வெறுமைப் பெருமூச்சு விட்டுக் கொண்டு… நாளும் வலம் வரும் இரண்டு தங்கைமார்… எல்லோரின் முகங்களும் அவள் கண் முன்னே காட்சிகளாய் தோன்றின.

“ம்… நான் வெளி நாட்டுக்குப் போனன் எண்டால் நானும் நல்லா வந்திடுவன். என்ர அப்பா, அம்மா, தங்கைமார் எல்லோரையும் சந்தோசமாக வாழ வைத்திடுவேன்”… என்ற எண்ணம் அவளுள் மெல்ல வேரூன்றிக் கொண்டது.

சாந்தியின் சம்மதம் கிடைத்ததும் பரமசிவமும் மாப் பிள்ளை வீட்டாருடன் தொடர்பு கொண்டு கல்யாண அலுவல்களைப் பேசி முடித்தார். நல்ல நாள் குறிக்கப் பட்டு… மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு வந்து பெண்ணையும் பார்த்து எல்லாம் பேசி முடிக்கப்பட்டன. பின்னர் பெண்ணின் போட்டோவும் வெளிநாட்டுக்கு மாப்பிள்ளையின் கைக்கு பறந்து போய்ச் சேர்ந்தது.

மாப்பிள்ளை வீட்டார் கேட்ட தொகைப் பணத்துக்காக… தம்மிடம் இருந்த வீட்டையும், தோட்டக் காணியையும் அடகு வைத்து… கொடுத்த வாக்கை ஒப்பேற்றி முடித்து… பெரிய நிம்மதிப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக் கொண்டார் பரமசிவம்.

எல்லாமே சுமுகமான நிலையில் முடிவு பெற… இரு வீட்டார் சம்மதத்துடனும், மாப்பிள்ளையின் வேண்டு கோளுக்கிணங்கவும் வெளிநாட்டுக்கு பறப்பதற்காய் சாந்தி கொழும்புக்கு கூட்டி வரப்பட்டாள்.

பயண அலுவல்கள் துரிதகதியில் நடைபெறத் தொடங் கின. பயண அலுவல்களின் வசதிக்காக சாந்தியை கொழும்பில் தங்கி இருக்க வைத்தான் அரவிந். நாட்க ளும் நகர்ந்து கொண்டே சென்றன. தினசரி நேரம் தவறாமல் போன் எடுத்து தன் அன்பை பகிர்ந்து கொள்ளவும், தன் ஆசைகளை எல்லாம் கொட்டித் தீர்க்கவும் அவன் ஒரு போதும் தயங்கவில்லை.

ஆசை ஆசையாய் தினமும் கொஞ்சிப் பேசி… நாளெல்லாம் மகிழ்வதைப் பார்த்தபோது… தனக்கும் நல்லதோர் கணவன் கிடைத்து விட்டதை எண்ணி சாந்தியும் சந்தோசப்பட்டு… கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள்.
தொடரும்…..

ஞாயிறு, 14 நவம்பர், 2010

விதி வரைந்த கோலங்கள்-பகுதி ..1


1. விதி வரைந்த கோலங்கள்-பகுதி ..1

மண்டையைப் பிளக்கும் அந்த உச்சி வெய்யில்… வேர்க்க விறு விறுவிறுக்க சயிக்கிலை மிதித்து மிதித்துக் களைத்துப் போய் வந்த பரமசிவமும்…. முற்றத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற அந்த மாமரத்தில் தன் சயிக்கிலைச் சாத்தி விட்டு… வெய்யிலின் அகோ ரம் தாங்க முடியாது… மேலே போட்டிருந்த அந்த சேட்டையும் கழற்றித் தோளில் போட்டவாறு வந்து… விறாண்டாவில் இருந்த கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டவரும்….

“கனகம்… கனகம்”… என அழைத்தார்.

குசினிக்குள் சமையலில் மூழ்கிக் கிடந்த கனகமும் …

” என்னப்பா வந்திட்டியளே”… எனக் குரல் கொடுத்த படியே வெளியே வந்தாள்.

“ஓம் கனகம்… தோட்ட அலுவலை முடிச்சுப் போட்டு… வாற வழியில இவன் புரோக்கனையும் பார்த்துக் கொண்டு வந்தன். ”

ஓ!…. என்னவாம் புரோக்கர்?… கனகம் வினாத் தொடுத்தாள்.

“பொறு கனகம் சொல்லுறன். அதுக்கு முதல்ல செம்பு நிறைய நல்ல குளிர் தண்ணியா கொண்டு வா பாப்பம்…. உச்சி பிளக்கிற வெய்யிலுக்கால வந்தது சரியான தாகமா இருக்கு”..

“ஏனப்பா… மோர் கரைச்சு கொண்டு வந்து தரட்டுமே? ”

“ம்… அதையும் தா. அதுக்கு முதல்ல நல்ல தண்ணி கொண்டு வா பாப்பம்”… என்று சொல்லவும்.. சரி என தலையை அசைத்த படி உள்ளே போன கனகமும்

“பிள்ள சாந்தி… அப்பாவுக்கு கொஞ்சம் மோர் கரை யம்மா. நல்லாக் களைச்சுப் போய் வந்திருக்கிறார்”…

என்று சமையல் கட்டுக்குள் சமைத்துக் கொண்டு நின்ற மூத்த மகள் சாந்தியிடம் சொன்னாள்.

“சரியம்மா…” என சொன்னபடி மோரைக் கரைத்து தாயிடம் கொடுத்தாள் சாந்தி.

மோரையும், ஒரு செம்பு நிறையத் தண்ணியையும் கொண்டு வந்த கனகமும் அதைக் கணவரிடம் கொடுத்தாள்….. தாகம் தீர அவற்றைக் குடித்து விட்டு…“கனகம் … அந்தக் கல்யாண விசயம் பற்றி… இவள் சாந்தியோட கதைச்சியே…?”

“இல்லையப்பா… அதைத் தீரவார மறந்தே போனன்.”

“உனக்கு வர வர மறதி நல்லாக் கூடித்தான் போச்சு கனகம்… இப்பவே உனக்கு அரள பேந்திட்டுதா என்ன? என சூடாகக் கேட்டார் பரமசிவம்…

“ஏனப்பா அதுக்குப் போய் இப்ப கத்திறியள்?… இப்பவே பிள்ளேட்ட கேட்டாப் போச்சு… என்னவாம் புரோக்கர் அத முதல்ல சொல்லுங்கோவன்?”… என்றாள்.

“ம்… நல்ல செய்திதான் கனகம்…. இந்தா பார்… மாப்பிளேட போட்டோவும் தந்திருக்கிறார்”…

என்றபடி எம்பலப்புக்குள் இருந்த அந்த 3 போட்டோ வையும் எடுத்து கனகத்திடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்த கனகமும்…

“ம்… மாப்பிள நல்லாத்தான் இருக்கிறார்… என்னப்பா?”… என்றாள்.

“ம்… மாப்பிள நல்லாத்தான் இருக்கிறார். முதல்ல இவள் சாந்திக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா எண்டு ஒரு சொல்லு கேக்க வேண்டாமே கனகம்?”….

அவள் யார் பிள்ளையப்பா? நாங்கள் வளர்த்த பிள்ள தானே!… நாங்கள் சொன்னால் வேண்டாம் எண்டா சொல்லப் போறாள்?”….

“சீச்சீ… அப்படி எல்லாம் சொல்லாத கனகம். எதுக்கும் பிள்ள சாந்தியிட்டயும் ஒரு வார்த்தை கேட்டு விடுவம்”… என்று சொல்லவும்…

“சாந்தி!… பிள்ள சாந்தி!… இஞ்ச ஒருக்கா வா மகள்… அப்பா உன்னைக் கூப்பிடுறார்”…

குசினிக்குள் சமைத்துக் கொண்டிருந்த சாந்தியும் கையை அலம்பிக் கொண்டு..

“என்னம்மா கூப்பிட்டியளே”…

“ஓம் பிள்ள… இஞ்ச கொஞ்சம் வாவன். இவன் புறோக்கன்… ஒரு கல்யாண விசயமா என்னைத் தேடி வந்தான். மாப்பிள வெளி நாட்டில இருக்கிறாராம். மாப்பிள்ளை வீட்டுக்காரர் இங்க நல்ல ஒரு பெண்ணாத் தேடினமாம் எண்டு… என்னட்ட கேட்டு வந்தான். நானும் அந்தக் குறிப்பை வாங்கிக் கொண்டு போய் எங்கட சாத்திரீட்ட காட்டிப் பாத்தன். குறிப்பு நல்ல பொருத்தமா இருக்கு என்று சாத்திரியும் சொல்லுறார். உனக்குப் பிடிச்சிருக்கா எண்டு பாத்துச் சொல்லு சாந்தி… பிடிச்சிருந்தால் மேல் கொண்டு கதைப்பம்.”… என்றார் பரமசிவம்.

தாயிடமிருந்து போட்டோவை வாங்கிப் பார்த்த சாந்தியும்…

“அப்பா!… வெளி நாட்டு மாப்பிள்ளையா? எதுக்கப்பா இவ்வளவு தூரத்தில பாக்கிறீங்கள்? எனக்கு… உங்கள, அம்மாவை, தங்கச்சிமாரை எல்லாம் விட்டு தூரமாப் போக விருப்பமில்லப்பா. இங்கேயே யாராவது ஒருவரா பாருங்கோ. என் கண் முன்னாலேயே உங்களையும் பார்த்துக் கொண்டு நானும் வாழ்ந்திடுவன்”…

“ஏன் சாந்தி அப்படிச் சொல்லுறாய்..? எங்களுக்கு மட்டும் உன்னைத் தூரமா அனுப்ப விருப்பமா என்ன? இந்த நாடு இருக்கிற நிலையில…. இங்க இருந்து நிம்மதியாவா வாழ முடியும்? ஏதோ நீயும் வெளிநாடு போய் நல்லா இருந்தியெண்டால்… நாளைக்கு உன் தங்கச்சிமாரும் கூட ஒரு நல்ல நிலைக்கு வந்திடு வாளுகள். நீங்கள் எல்லோரும் சந்தோசமா இருக்கிறதப் பார்த்துக் கொண்டே நானும் நிம்மதியா கண்ண மூடிடுவன்.”….

வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் சாதாரணமாக எந்தப் பெற்றோருக்கும் இருக்கக் கூடிய ஆசையும், தவிப்பும் பரசிவத்துக்குள்ளும் குடிகொண்டிருந்தது.

இடையே குறுக்கிட்ட கனகமும்….

“ஓம் சாந்தி!… அப்பா சொல்லுறதில ஞாயம் இருக் கம்மா. நல்ல இடம் வேற. பொருத்தமும் நல்லாப் பொருந்தி இருக்கிறதால…. இதை நீ வேண்டாம் எண்டு சொல்லாத சாந்தி”….. என தன் பங்குக்கு தாயும் சொல்லி முடித்தாள்.

தாயும் தந்தையும் ஒரே தீர்மானத்தில் இருந்த போதும் சாந்திக்கு எல்லோரையும் விட்டுப் பிரிந்து போவதை நினைத்துப் பார்த்த போது மிகவும் வேதனையாகவே இருந்தது. ஆனாலும் பெற்றோர்களின் வார்த்தையை யும், அவர்கள் விருப்பத்தையும் தட்டாமல்…

“சரி அப்பா,… சரி அம்மா… உங்கள் விருப்பம் எதுவோ அதுபோலவே செய்யுங்கோ.”… எனக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

அன்று இரவு முழுவதும் சாந்திக்குத் தூக்கமே வர வில்லை. எல்லோரையும் விட்டுப் பிரியப் போவதை நினைத்து சோகம் ஒரு புறமுமாய்… வரப் போகும் கணவன் எப்படி இருப்பானோ?… என்ற பயம் ஒரு புறமுமாய்… கல்யாண ஆசைகள் ஒரு புறமுமாய்… பருவத்தின் துடிப்புகள் துடித்து எழுந்து அடி வயிற்றில் ஏதோ பறப்பதாய் ஒரு மெல்லிய உணர்வு… இப்படி எல்லாமே அவள் தூக்கத்தையே கலைத்து நிற்க…. அவளின் சிந்தனைகள் யாவும் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின.





விதி தொடரும் .......

புதன், 10 நவம்பர், 2010

என் வானில் ஓர் நிலா!

அந்தக் கடற்கரை மணலில் தனிமையில் இருந்து கொண்டு கடலையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் நிலவன்.

அழகான அந்தப் பொழுதில் அதுவும் கடற்கரையில்… ரசிப்பதற்கு எத்தனையோ அழகுகள் கொட்டிக் கிடந்தும்… அன்று எதையுமே ரசிக்கும் அளவிற்கு அவனின் மனம் அமைதியாக இருக்கவில்லை. சோகம் ததும்பி வழிய… மனம் கனத்துப் போய் இருந்தது.

அன்று அவன் காதல் தேவதை நிலாவின் பிறந்த நாள். அவளின் நினைவுகளாய்… அவனுள்ளே வருஷங்களாய் அடங்கிக் கிடந்து அழிக்க முடியாமல் அழுத்தும் அந்தக் குமுறல்கள் கண்ணீராய் வெளிப்பட்டு கடல் நீருடன் கலந்து கரைந்தது. கண்களில் துளிர்த்த கண்ணீரை கை விரலினால் சுண்டி விட்டபடி எழுந்து நடந்தான் நிலவன்.

அன்றைய இரவு போலவே இன்றும் இரவு. அன்றைய நிலவு போலவே இன்றும் நிலவு… வானம் மாற வில்லை… நிலமும் மாறவில்லை… அலைகள் ஓய வில்லை… எதுவுமே மாறவில்லை… ஆனால் நானும் அவளும் கட்டிய காதல் கோட்டை மட்டும் எவர் இட்ட சாபத்தால் இடிந்து போனது….?

கட்டிய காதல் கோட்டை சிதைந்து போனாலும்… அந்தப் பருவ வயதிலேயே… காதல் பயிரை மனதில் வளர் த்து… கண்ணிலும் நெஞ்சிலும் நிறைந்து…. இன்றும் என் நெஞ்சோடு நிறைந்து வாழும் உன்னையும், உன் நினைவுகளையும் எப்படி நான் மறப்பேன்…?

ஓ!… அன்று… அன்று… அதை எப்படி மறப்பேன்?…

நிலவன்!… என்னைக் காப்பாத்தடா!… என கதறிய வாறே… கண்ணீர் வழிந்தோட என் மார்பில் சாய்ந்தாயே?… அதை எப்படி மறப்பேன்?….

அந்தக் கடற்கரை மணலில் கால்கள் புதையப் புதைய நடந்தான் நிலவன். அவன் மனதில் புதைந்து போய்க் கிடந்த பசுமை நினைவுகள் அவனுள் பீறிட்டுக் கிளம் பின. இன்றைய தடம் மாறிப் போன வாழ்க்கையின் வரண்டு போன நிஜங்களுக்குமிடையில்… அவளுட னான இறந்த கால நினைவுகளை அசை போட்டபடி நடக்கின்றான் நிலவன்.

ம்… அப்போது நிலவன் உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். படிப்பில் மட்டுமல்ல இசைத் துறையில் பாடுவதில், இசைக்கருவிகள் மீட்டுவதில், நடிப்பில் எல்லாம் நல்ல கெட்டிக்காரன். அவனுள்ளே அத்தனை கெட்டித்தனங்களும் கொட்டிக் கிடக்க… அந்த வகுப்பில் அவன் ஓர் ஹீரோவாகவே இருந்தான்.

அப்போது அதே வகுப்பில் புதிதாய் வந்து சேர்ந்தாள் நிலா. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. நிலவனுடன் போட்டி போட்டு புள்ளிகள் எடுக்கும் அளவிற்கு படிப்பில் கெட்டிக்காரி யாக இருந்தாள் நிலா. போட்டிகள் இருந்ததே தவிர ஒரு சிறு பொறாமை கூட அவள் மனதில் ஒருபோதும், எள்ளளவும் இருந்ததே இல்லை.

எல்லோருடனும் மிகவும் அன்பாகப் பழகும் சுபாவம். யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாது உதவி செய்யும் குணம். இடக்கையால் முத்து முத்தாய் எழுதும் அழகு. சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் அழகு. தலை சாய்த்து சாந்தமாய்ப் பூக்கும் அந்தப் புன் முறுவல்… இப்படியான அவளின் செய்கைகள் ஒவ் வொன்றும் நிலவனைக் கொள்ளை கொண்டன.

நாட்கள் நகர்ந்தன. நிலவனும், நிலாவும் நல்ல நண்பர் களாகினர். ஆனாலும் என்னவோ ஏதோ தெரிய வில்லை. நிலா வந்த நாளிலிருந்து அவனுக்குள் ஏதோ ஓர் ஈர்ப்பு சக்தியை கொடுத்து, அவள் பக்கம் ஓர் பிடிப்பை ஏற்படுத்திய வண்ணமே இருந்தாள். அவனும் புரியாத ஏதோவோர் உணர்வில் அகப்பட்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தான்.

கனவுகள் இரவைத் தத்தெடுத்துக் கொண்டன. அது காதலா? இல்லை வேறெதுவுமா?… என்பதைக் கூட அவனால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை. எத்தனை பெண்களோடு பேசிப் பழகி மகிழ்ந்தாலும்… பார்த்துச் சிரித்தாலும்… நிலாவின் பார்வை தந்த சுகம் மட்டும் இதுவரை அவனுக்கு எவரிடமும் கிடைத்த தில்லை.

நாட்கள் நகர நகர அவனுள்ளே பலத்த மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அவள் பார்த்தாலே போதும் போதும் என அவனின் தேகம் பற்றி எரியத் தொடங் கியது. அவனின் அசைவுகளெங்கிலும் எப்போதும் அந்தத் தேவதையின் முகம் வந்து எட்டிப் பார்த்தது.

படம் —- அன்பே உன் வசம்
பாடல்—-அசர வைத்தாய் அன்பே……..

நாட்கள் செல்லச் செல்ல நிலா முழுமையாகவே அவ னுள் நிறைந்து கொண்டாள். அவன் மனதில் காதல் அரும்பியது. அவன் மன வானில் தினம் தினம் காதல் தேவதையாய் நிலா பவனி வந்தாள். முற்றாகவே அவன்…. அவள் நினைவில் மூழ்கிய போதும் தன் மனதில் எழுந்த காதலை சொல்ல முடியாது தவியாய் தவித்தான் நிலவன்.

சொல்ல நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஓர் தயக்கம் வந்து அவனைத் தடுத்தது. தன் காதலை அவள் ஏற்றுக் கொள்வாளா? தன் காதலை சொல்லப் போய் அப்படி எதுவும் இல்லை… எனச் சொல்லி தன்னை வெறுத்து விட்டால்?… என்ற பயம் அவனை ஆட்டிப் படைத்தது. காதல் அவஸ்தையை தன்னுள் சுமந்தபடி அதைச் சொல்லச் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவனுக்கும், அதற்குச் சாதகமாய் ஓர் நாள் அமைந்தது.

அன்று நிலாவின் பிறந்த நாள். அந்த நல்ல நாளில் எப் படியாவது தன் காதலைச் சொல்லி விடத் துணிந்தான் நிலவன். இனியும் என்னுள் இந்தக் காதலை மறைத்து வைத்து அவஸ்தைப்பட முடியாது. இதை எப்படியாவது இன்று அவளிடம் சொல்லி விட வேண்டும் என முடி வெடுத்தவனாய்…

நிலாவுக்கு ஓர் பரிசுப் பொருளையும் வாங்கிக் கொண் டான். காதல் கண்ணை மறைத்தது. கடிதம் எழுதத் தூண்டியது. அவன் துணிந்து விட்டான். எழுதினான்… தைரியத்துடன் தன் உள்ளத்தில் உள்ள காதலை கடிதத்தில் எழுதினான். எழுதிய கடிதத்தை அந்தப் பரிசுக்குள் மறைத்து வைத்துக் கொண்டான்.

அன்று வகுப்பில் சின்னதாய் ஓர் பார்ட்டி. எல்லோரும் அன்பாக அவளை வாழ்த்தினார்கள். அவனும் தன் வாழ்த்தை அன்போடு சொல்லிக் கொண்டான். பாட சாலை முடிந்து போகும் வேளை…

நிலா! …. ஒரு நிமிடம்.

ஓ!……….. என்ன நிலவன்?

உங்கட பிறந்த நாளுக்காய் ஓர் சின்னப் பரிசு வாங்கி னன்… இந்தாங்கோ.

ஓ!………. ராங்ஸ் நிலவன்.

நிலா!… ஆனால் ஒன்று… இந்தப் பரிசை இங்க வைச்சுப் பிரிச்சுப் பாக்காமல் வீட்டுக்குக் கொண்டு போய் பிரிச்சுப் பாருங்கோவன்.

ஓ!… அப்படியா? ஏன் நிலவன்?… ஒன்று கேக்கலாமா?… உள்ள வெடி குண்டு, கிண்டு எதுவும் இல்லையே?… என தனக்கே உரித்தான அந்த கலகலப்பான பாணியில் சிரித்தபடி கேட்டாள் நிலா.

சீச்சீ… அப்படி எல்லாம் நான் தருவனா? அதுவும் உங்க ளுக்கு நான் தருவனா என்ன?…

அப்பாடா!… அப்படி எண்டா சரிதான். ஓகே நிலவன்!… நாளை சந்திப்போம்… எனக் கூறி விட்டு விடை பெற்றாள் நிலா.

அவன் தைரியமாக ஒருவாறு கடிதத்தை கொடுத்த போதும் அன்று அவன் அவனாகவே இல்லை. வீடு சென்றவனின் மனது அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நின்றது. புத்தகத்தை விரித்தால் படிக்கவும் முடிய வில்லை. படுப்போம் என்று படுத்தாலும் அன்று இரவு அவனை நித்திராதேவி அணைத்துக் கொள்ளவும் இல்லை. அன்று அவனுக்கு தூக்கம் வரவே இல்லை. மனதில் ஏதோ இனம் புரியாத ஓர் பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. கடிதத்தை அவள் வாசிப்பாளா? தன் காதலை அவள் ஏற்றுக் கொள்வாளா? என எண்ணி எண்ணியே கொட்டக் கொட்ட முழித்துக் கிடந்தான் நிலவன்.

பொழுதும் மெல்லப் புலர்ந்தது. அவன் அயர்ச்சியுடன் எழுந்தான். இரவு முழுவதும் தூக்கமே இல்லாததால் தலை விண் விண் என்று வலித்தது. காலை எழுந்து பாடசாலைக்கு வெளிக்கிட்டவனும் அம்மா கொடுத்த சாப்பாட்டை ஏதோ அரையும் குறையுமாய் விழுங்கி விட்டு பாடசாலைக்குச் சென்றான். அவன் கண்கள் சுற்றும் முற்றும் நிலாவையே தேடின. அவளை எங்குமே காணவில்லை.

சற்று நேரத்தில்… அப்போதுதான் பூத்த புது மலாராக அங்கே வந்தாள் நிலா. அவளைக் கண்டதும் அவனுக்கு “குப்” என்று வேர்த்தது. ஆனால் அவளிலோ எந்த மாற் றமும் இருக்கவில்லை. வழமை போலவே அவனின் அருகில் வந்தவளும் எந்தச் சலனமும் இல்லாமல்…

ஹாய்!… வணக்கம் நிலவன் … என்றாள்.

அவனும் பதிலுக்கு… வணக்கம் நிலா…. என்றான்.

அவன் மனதுள் ஒரே போராட்டம். என்ன இவள்? … எப்போதும் போலவே இருக்கிறாள்?… என் கடிதத்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் போகின்றாளே?.. அப்படி யானால் என் கடிதத்தை அவள் பார்க்கவில்லையோ?

சீச்சீ…. அப்படி இருக்காது. கட்டாயம் என் பரிசு என்ன வென்று உடைத்துப் பார்த்திருப்பாள். ஒருவேளை… கடிதத்தை அவள் காணவில்லையோ?

சீ… அப்படியும் இருக்காது. தெரியும்படிதானே அந்தக் கடித்தத்தை மேலே வைத்தேனே? இப்படி கேள்விகள் அவனுள் எழ… கேள்வியும் கேட்டு பதிலையும் அவனே தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். மதியம் இடை வேளை நேரம். அப்போது அவனின் அருகில் வந்த நிலா…

நிலவன்!…. என்றாள்.

அவளின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

நிலவன்!… உங்கள் லெற்றர் பாத்தன். ம்… என்ன சொல் வது? … இப்போது நாம் கவனமாகப் படிக்க வேண்டிய காலகட்டம். பரீட்சை வேற நெருங்குது. இந்த வேளை யில… உங்க மனசைக் குழப்பி காதல்…. கீதல் என்று குழம்பி படிப்பை கோட்டை விட்டு விடாதீங்கோ. எமக்கு அதுக்கெல்லாம் இன்னும் கன காலம் இருக்கு. இப்ப எங்களுக்கு படிப்புத்தான் ரொம்ப முக்கியம். இந்தப் பொல்லாத காதல் கனவுக்குள் விழுந்து உங்களையும் குழப்பி என்னையும் குழப்பாதீங்கோ. எனக்கு அப்படி ஓர் எண்ணமே மனதில் இல்லை நிலவன். எனக்கு என் படிப்புத்தான் இப்ப ரொம்ப முக்கியம். என் பெற்றோர் களின் எதிர்பார்ப்பும் அதுதான். வீணாக மனதைப் போட் டுக் குழப்பாமல் கவனமாகப் படியுங்கோ நிலவன். நாம் இருவரும் இப்போது இருப்பது போலவே… எப்போதும் நல்ல நண்பர்களாகவே இருப்போம்… ஓகே…?

என மிகவும் அன்பாக… அமைதியாகக் கூறி விட்டுச் சென்றாள் நிலா.

அவள் அப்படி நடந்து கொண்ட விதம் கூட அவனுக்கு இன்னமும் அவளின் மேல் பிடிப்பை ஏற்படுத்தியது. ம்… வேறு யாரும் என்றால் துள்ளிக் குதித்து, கடிதத் தை கிழிச்சு, மூஞ்சையில் எறிஞ்சு எத்தனை ஆர்ப் பாட்டம் எல்லாம் செய்து திமிராக நடந்திருப்பார்கள்?… பாரேன்… எவ்வளவு அமைதியாய்… பண்பாய்… எனக்குப் புத்தி கூறி விட்டு செல்கிறாள்… என தனக்குள் தானே அவளை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டவனும்…

நிலா!… இன்றில்லாவிடிலும் என்றாவது ஓர் நாள் உன்னை நான் என் மன வானில் என் நிலாவாக்காமல் விடவே மாட்டேன். நீதான் என் காதலி… என தனக்குள் ஓர் திடசங்கர்ப்பத்தை எடுத்துக் கொண்டான்.

மாதங்கள் நகர்ந்து நகர்ந்து வருடத்தை விழுங்கிக் கொண்டன. பரீட்சையும் நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுள் புதிதாய் ஓர் சோகம் வாட்டத் தொடங்கியது. பரீட்சை முடிய பாடசாலை முடிந்து விடும். அதன் பிறகு நிலாவை எங்கு?… எப்படிச் சந்திப்பது?.. இவள் இப்படியே போய் விட்டால் என் காதல் என்னாவது?.. என்ற யோசனை நாளும் அவனை வாட்டத் தொடங்கி யது. ஓர் நாள்……

நிலா!… உங்களோடு கொஞ்சம் மனம் விட்டுக் கதைக் கலாமா? ம்… தாராளமாகக் கதைக்கலாமே?… என்ன சொல்லுங்கோ நிலவன்.

பரீட்சை முடிய… பாடசாலை முடிந்துவிடும்… நீங்களும் போய் விடுவீங்கள். அதுக்குப் பிறகு உங்களை நான் எப்படி?… எங்கு சந்திப்பது?

ஓ!… ஏன்? … எதற்கு?… என்னை நீங்க சந்திக்க வேணும்?

நிலா!.. நீங்க நடிக்காதீங்கோ. நேராகவே கேக்கிறன். உங்கட மனச் சாட்சியை தொட்டு உண்மையைச் சொல்லுங்கோ பாப்பம்… என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா இல்லையா?

ம்… ஓர் நல்ல நண்பானாய் உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

இல்ல… நீங்கள் பொய் சொல்லுறீங்கள். நான் இதை நம்ப மாட்டன். எங்க நிலா… உங்க மனசில நான் இல்ல… உன்மேல எனக்கு காதலே இல்ல… என்று என் மேல அடிச்சு சத்தியம் பண்ணுங்கோ பாப்பம்…

நிலா தயங்கியபடி மௌனமாய் நின்றாள்.

பாத்தீங்களா?… பாத்தீங்களா?… எதுக்கு சும்மா வெளி யில வேசம் போட்டு நடிக்கிறீங்கள்?… ஓம் உன்னையும் எனக்குப் பிடிச்சிருக்கடா… நானும் உன்னைக் காதலிக் கிறன்… என்று ஓரு வார்த்தை சொல்லுங்கோ. அது போதும் எனக்கு. அதுக்குப் பிறகு உங்கள் படிப்பு முடி யும் வரையும் நான் உங்கள தொந்தரவு பண்ணவே மாட்டன். இது தெரியாமல் என்னால் படிக்கவே முடியவில்லை நிலா… என்றான்.

அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டும்… எதுவுமே பேசாமல் அமைதியாய் அவனையே வைத்த கண் வாங்காமல் சில நிமிடம் பார்த்துக் கொண்டு நின்ற வளும் … வெட்கம் அவளை ஆட்கொள்ள… முகத்தை மறு பக்கம் திருப்பி …

எனக்கும் உன்னை பிடிச்சிருக்கடா… என்று சொன்ன போது வெட்கத்தால் அவள் கன்னம் சிவந்து புன்னகை விரிந்தது.

அவள் கூறியதைக் கேட்டதும் தன்னையே மறந்து… தாங்க முடியாத சந்தோசத்தில் அவளை இறுக்கமாய் அணைத்து முத்தமிட்டான் நிலவன்.

சீ… என்னடா இது?… அதுக்குள்ள இப்படியா?… நீ ரொம்ப மோசம்டா. இதுக்குத்தான் இதுநாள் வரை நான் எனக் குள்ளேயே மறைச்சு வச்சிருந்தன்… சீ… விடடா என்னை… என சிணுங்கியவளாய் அவனின் பிடியில் இருந்து விடுபடத் துடித்தாள் நிலா.

ம்… இந்த விருப்பத்தை மறைச்சு வைச்சுக் கொண்டா என்னை வருடக் கணக்காய் தவிக்க வைத்தாய்?… பொறடி கள்ளி… இதுக்கெல்லாம் என்ன செய்யிறன் என்று பாரன்.

சரிதான் போடா… என்னதான் செய்யப் போறாய்?… நீ செய்யிறதை செய்யடா… எனச் சொல்லிவாறு அந்த இடத்தை விட்டு ஓடிச் சென்றாள் நிலா.

அன்று முதல் இருவரும் காதல் பறவைகளாய் நாளும் வலம் வந்தனர். நாளும் சந்திப்புக்கள். சின்ன சின்ன பரிசுகள். செல்ல முத்தங்கள்… இப்படி இன்ப உலகத்தில் காதலர்கள் இருவரும் சஞ்சரித்தார்கள். இருப்பினும் இந்தக் காதல் கட்டுக்கடங்குமா என்ன?… அன்று…

நிலா!… இன்று ஓரு இடத்துக்கு என்னோட நீ வரவேணும்.

ஆ!… என்னடா நீ? … எங்க வரச் சொல்லுறாய்?

கடற்கரைக்குப் போய் வருவோம் வா.

ம்கூம்… மாட்டன்… மாட்டன்… உன்னோட நான் அங்கெல்லாம் வரவே மாட்டன்.

ஏன்டி வரமாட்டாய்?

யாரும் கண்டா என்னடா செய்யிறது?

யாரும் காணாமல் நான் அல்லவா கூட்டிப் போவன். நீ பயப்படாம என்னோட வாடி.

போடா… உன்னை எனக்கு பிடிக்கவே இல்ல… நீதான் சொன்னியே படிப்பு முடியும் வரை தொந்தரவு பண் ணவே மாட்டன் என்று.. இப்ப பாரேன்…

ம்… சொன்னன்தான். நான் என்ன நெடுகவா கேட்கப் போறன்? ஒருக்காத் தானேடி வரச் சொல்லி கேக்கிறன். பிறகு இதுக்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரி யாது. ஆசையாய் இருக்கடி… ஒரே ஒரு தடவை ப்ளீஸ்… நிலா… என்று கெஞ்சலாய்க் கேட்டான்.

“என்னோடு பேசாதே”… நான் கோவமாய் இருக்கிறேன்.. எனக் கூறி திரும்பி உட்கார்ந்தாள் நிலா.

“ஏய்… ஏய்… என்னோட கோவமா?… எதுக்கு கோவம்?… சரியான காரணமில்லாமல் என்மேல் கோபம் காட்டு வது என்னடி நியாயம்?… என்று கேட்டபடி அவளுக்கு எதிரில் தரையில் மண்டியிட்டான் நிலவன்.

ஓ!… சரியான காரணம் ஏன் இல்லை?.. நீ இப்படி கேப்பது சரியாடா? …

நான் உனக்காக உருகி உருகி நிற்பது உனக்கு எங்கேடி தெரியப் போகுது? எனக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கும் தானேடி? அதை புரிஞ்சு கொள்ளாமல் என் மேல இப்படி கோவிக்கலாமாடி?… உன்னிடம் கேட் காமல் நான் வேறு யாரிடமுமா இதைப் போய் கேக்க முடியும்? … கொஞ்சம் இரக்கம் காட்டேண்டி.

போடா… என்னைத் தொடாதே… நான் ரொம்பக் கோப மாய் இருக்கிறேன்… என்று முகத்தைத் திருப்பினாள் நிலா.

உன் கோபத்தை எப்படிக் கரைக்க வேணும் என்று எனக்குத் தெரியும்டி… என்று சொல்லியவாறு தன் இரு கையாலும் அவள் முகத்தை பிடித்து அவள் கண் ணோடு தன் கண்ணை உற்று நோக்கி சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றவனும்.. அப்படியே அவளை இறுக்கமாய் அணைத்து முத்தமிட்டபடி….

நிலா!… இதுக்கு முதல் உன்னை நான் இப்படி ஏதும் கேட்டனா?… இல்லையே. ஒரே ஒரு தடவை உன்னை என் மோட்டபைக்கில் ஏத்திக் கொண்டு போக ஆசைப் படுறன். ஓம் என்று சொல்லடி… என்று கெஞ்சினான்.

அவனின் கெஞ்சலிலும், கொஞ்சலிலும் கரைந்த நிலாவும் சரி என சம்மதித்து… மாலை ரியூசனைக் கட் பண்ணி அவனுடன் புறப்பட்டாள்.

படம் ——– அன்பே உன் வசம்
பாடல்——- என்றாவது எங்காவது………

கடற்கரையை அடைந்த காதல் பறவைகள் இருவரும் அந்தக் கடற்கரை மணலில் … அந்த அழகான மாலைப் பொழுதின் இதமான காற்றின் தழுவலில்… அந்த அழகை எல்லாம் ரசித்தபடியே இருந்தார்கள்… அவனின் நெஞ்சினில் அவளும் கொடியாகப் படர்ந்திருக்க… காதல் ஜோடிகள் தம்மையே மறந்திருந்த அந்த வேளை…

எங்கிருந்தோ பாய்ந்து வந்த அந்த துப்பாக்கிக் சூடு அவள் நெஞ்சில் பாய்ந்தது. கண் மூடி முழிக்கு முன்னே அடுத்து வந்த துப்பாக்கிச் சூடு நிலவனின் கையைக் குறி பார்த்தது. மீண்டும் பாய்ந்து வந்த குண்டு நிலாவின் நெஞ்சில் பாய…

நிலவன்!… ப்ளீஸ்… ஹெல்ப் மீடா…. என கத்தியவாறே அவனின் நெஞ்சில் சோர்ந்து விழுந்தாள் நிலா.

மறுநாள் கண் விழித்துப் பார்த்த போது நிலவன் மருத்துவமனையில் கிடந்தான். அவனைச் சுற்றி அவனின் நண்பர்கள் சோகமாய் நின்று கொண்டிருந் தார்கள். கண் விழித்தவனும்…..

டேய் என்னடா நடந்தது?… நான் எப்படி இங்க? … எங்கடா என் நிலா?… என பதறினான்.

நிலவன்!… ஒன்றுமில்லடா… நீ கொஞ்சம் அமைதியாய் படு. அப்புறம் எல்லாம் கதைக்கலாம் என நண்பர்கள் சொன்ன போதும் அவன் எதையும் கேட்காதவனாய்… நண்பன் ஒருவனின் சேட் கொலரை இழுத்துப் பிடித்துக் கொண்டு…

எங்கடா நிலா?… சொல்லு?… எங்கடா என் நிலா?… எனக் கத்தினான். நண்பனிடம் இருந்து பதில் ஏதும் வராமல் கண்ணீர் மட்டுமே பதிலாய் வந்தது. அவனின் மூளை அவசரமாய் வேலை செய்யத் தொடங்கியது.

கடற்கரையில் இருவரும் தமை மறந்து இருந்ததுவும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வந்ததும், நிலா கதறிக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்ததுவும் படமாய் ஓடியது.

கட்டிலில் இருந்து எழுந்தவனும் வேகமாய் வெளியில் ஓடினான். அவனை நண்பர்கள் தடுத்தும் அவன் நிற்க வில்லை. அவனின் பின்னால் ஓடி வந்த நண்பர்கள் அவனை மறித்து…

வேண்டாம் நிலவன். நாங்கள் சொல்வதைக் கேள். இப்போ எங்கும் போகாதே. என இடை மறித்து… குளுக்களுகிடையிலான மோதல் ஒன்றில் ஆள் மாறி உன்னை சுட்டதாகவும், அந்தச் துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே நிலா இறந்து விட்டதாகவும் கூறினார்கள்.

“நிலா … ஐயோ… நான் என் செய்வேன்?… மாட்டேன் மாட்டேன் என்று மறுத்த உன்னை… கெஞ்சிக் கூத்தாடி கூட்டிச் சென்று சாகடித்த பாவி நான் ஆகி விட்டேனா?… நானே உன் உயிருக்கு உலை வைத்த பாவியாகி விட்டேனே?… ஐயோ!… இனி நான் என் செய்வேன்?… உன்னைப் பிரிந்து எப்படி நான் வாழ் வேன்?… என அந்த வானமே பிளக்கும் படி கதறினான் நிலவன். நண்பர்கள் அவனை ஆறுதல் படுத்தினார்கள். ஆனால் அதை எல்லாம் கேட்கும் நிலையில் அவன் இல்லை. தன் தலையில் அடித்து அடித்து அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். அதைப் பார்த்து நண்பர் கள் கண்களிலும் கண்ணீர் வழிந்தோட… அவர்களும் செய்வ தறியாது தவித்துப் போய் நின்றார்கள்.

தன் மனம் ஆறும்வரை அழுதவனும் சிறிது அமைதி யானான். சிறிது நேர அமைதியின் பின்னர் அவனை யும் அழைத்துக் கொண்டு நிலாவின் வீட்டிற்குச் சென்றார்கள்… அங்கே…

அழுகையின் ஓலம் காதைப் பிளந்தது. அந்த வீட்டின் ஒரே ஒரு செல்ல மகாராணி அவள். நான்கு அண்ணன் களுக்கு அவள் ஒரே ஒரு செல்லத் தங்கை. எல்லோரின் அழுகையிலும் அந்த வீடே சோகத்தில் முழ்கி இருந் தது. தன் காதல் தேவதையின் அழகு முகத்தை அந்தக் கோலத்தில் பார்த்தவனுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. அழுகையை அடக்க முடியாமல் அழுபவர்களோடு சேர்ந்து ஓ…வென அவனும் அழுது விட்டான்.

இதைப் பார்த்த நண்பர்கள் அவனைத் தேற்றியவாறு அங்கிருந்து வெளியே அழைத்துக் கொண்டு அவனின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அவனைக் கண்டதும் அவனின் தாய், சகோதரிகள் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறத் தொடங் கினார்கள். நடந்தவற்றை எல்லாம் அவர்களுக்கு விபரமாகச் சொல்லி இனி அவனை எங்கும் வெளியே விட வேண்டாம் என வீட்டாருக்கும் கட்டளையிட்டு விட்டு, அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லி அவர்களை ஒருவாறு அமைதியாக்கி விட்டு நண்பர்கள் எல்லோரும் கிளப்பிச் சென்றார்கள்.

நாட்கள் சில நகர்ந்தன. பெற்றோரின் கட்டுப்பாட்டிலும், நண்பர்களின் கட்டுப்பாட்டிலும் நிலவன் வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்தான். அவனை வெளியே விட்டால் நிலாவின் இழப்பின் கோபத்தில் அந்தக் குளுக்களோடு ஏதும் மோதல் எற்பட்டு இவனின் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று எல்லோரும் அஞ்சினார்கள்.

நிலாவின் இழப்பு அவனை வெகுவாக பாதித்தது. யாருடனும் மனம் விட்டுப் பேசாமல் மௌனமாக இருந்தான் நிலவன். எப்பொழுதும் அவனின் சோகம் படிந்த கண்களில் ஒருவித ஏக்கம் கலந்திருக்கும். தன் துணையை இழந்து விட்ட பறவையைப் போன்று சோர்ந்தே இருந்தான் நிலவன்.அவனின் அந்த நிலமை யைப் பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிந்தது. அவனின் கோலத்தைப் பார்த்துத் தாங்க முடியாத அவனின் தாய் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி விடத் திட்டமிட்ட வளாய்…

துயரம் கவிந்த முகமாக அவனின் அறைக்குள் நுழைந் தாள். அவளின் உள் மனதை அவளின் முகம் படம் போட்டுக் காட்டியது. நிறையப் பயந்து போய்க் காணப் பட்டாள். தாயைக் கண்டும் அவன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான்.

என்ன நிலவன்?… அம்மா வந்து எவ்வளவு நேரமாச்சு?வந்ததிலிருந்து எதுவுமே பேசாமல் ஆழ்ந்த சிந்தனை யில் இருக்கிறாய்?… என மௌனத்தைக் கலைத்தாள் தாய்.

நிலவன் அப்போதும் அமைதியாகவே இருந்தான். நிலவனின் அருகில் போய் இருந்தவளும் தன் மடியில் அவனைப் படுக்க வைத்து அவனின் தலையைத் தடவியவாறு… வெளிநாட்டுத் திட்டம் பற்றி நிலவ னுக்குக் கூறிய போது…

அவன் மறுத்தான். தான் எங்குமே செல்ல மாட்டேன் என மறுப்புச் சொன்னான். அதை கேட்டு தாய் துடியாய்த் துடித்தாள். ஒரு மௌனம் வெடித்து அழுகை விசும்பலாய் வெளிப்படுகிறது.

அவளின் மூடிய இமைகளின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் வழிந்து முகத்தில் கோடு கிழித்தது. தாயின் கண்களிலிருந்து வடிந்த நீர் அவனின் அவன் கன்னத் தில் விழுந்தது. தன் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளிகளைக் கையால் தேய்த்துத் துடைத்த படி நிமிர்ந்து பார்த்தான் நிலவன்.தன் தாயின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் அவன் துடித்தே போனான்.

அம்மா!….என்ன அம்மா?… எதுக்கு நீங்கள் அழுகிறீங்கள்?…

அழுத விழிகளுடன் எதுவும் பேசாமல் நீண்ட பெரு மூச்சை மட்டும் உதிர்த்து விட்டு… தாய் எதுவுமே பேசாது கண்களை மூடி… இரு கை கூப்பி நிற்கிறாள். அந்தக் கோலத்தைக் கண்டு அவனின் நெஞ்சு கலங் கியது. தன் தாயின் இரு கரங்களையும் இறுகப் பற்றியவாறு அன்போடு….

சரி அம்மா.. நீங்கள் சொல்வது போல… நான் வெளி நாட்டுக்குப் போறன்… அழாதீங்கோ. நீங்கள் பயணத் திற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கோ… என்று கூறியவாறு தாயின் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டான்.

நிலவன்!… உன் வேதனை எனக்குப் புரிகிறது மகனே!.. ஆனாலும் இப்படியே இங்கிருந்து என்னதான் செய்யப் போறாய்?….என்றாள் பரிதாபம் இழையும் குரலில்.

அவனை அங்கு வைத்திருக்கப் பயந்த பெற்றோர்கள் அவனை உடனடியாக வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவதற்காய்.. அவசர அவசரமாய் தாம் இருந்த வீட்டையும், தம்மிடம் இருந்த நகைகளையும் அடமானம் வைத்து அவனின் பயண ஏற்பாடுகளைத் துரிதமாய் செய்து முடித்தனர்.

அம்மா, அப்பா, இரண்டு சகோதரிகளும் எயாப்போர்ட் வரை வந்து அவனைப் பயணம் அனுப்பி வைத்தார்கள். அழுத விழிகளுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று வெளி நாட்டுக்கு வந்து சேர்ந்தான் நிலவன். வெளிநாடு வந்து இறங்கியதும் …

திக்குத் திசை தெரியாமல்… பாசை புரியாமல் அகதி முகாமுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு… தவித்து அகதி யாய் அந்நிய தேச வாழ்வு. இப்படியே ஆறு நீண்ட வருசங்கள் ஓடி முடிந்து விட்டன.

இப்போது இழந்த அனைத்தும் கிடைத்தன. பணம் பொருள், நகை, வீடு, எல்லாமே மீண்டும் கிடைத்தன. ஆனால் அவள் மட்டும் இல்லை. அவள் நினைவுகள் மட்டுமே எஞ்சியிருந்தது.

இன்று என் தேவதை நிலாவின் பிறந்த நாள். ம்… இதே போல் அவளின் ஓர் பிறந்த நாளின் போதுதான் முதன் முதலாய்… அவளிடம் என் உள்ளத்தைத் திறந்து காதலைச் சொன்னேன். இன்று அதனை எல்லாம் எண்ணிப் பார்த்தாலும் நெஞ்சம் சுடுகிறது.

முதன் முதலாய் என் மனதில் பூத்த காதல் கவிதை அல்லவா அவள் ? முழுமையாய் மனதில் நிறைந்த அவளைக் காலங்கள் பல காத்திருந்து அல்லவா பெற்றேன்… எப்படி என்னால் அவளை மறக்க முடியும்? அவளுக்கு என் இதயத்தில் நான் கோயில் அல்லவா கட்டி வைத்திருக்கிறேன். எப்படி அவளை நான் மறப்பேன்? என்று அவன் மனம் அழுது புலம்பியது.

வாழ்க்கையில் இழக்கக் கூடாத எதை நாம் இழந்து விடுகிறோமோ அதை சாகும் வரை மறந்து விட முடிவதில்லை. இது உண்மை. நான் இழந்தது உன்னை. எனக்குள் இருந்த உன்னை.

என்னையே மறக்க வைத்து…. இரவெல்லாம் கனவாக… கனவெல்லாம் இரவாக… புதியதோர் உலகுக்குள் என்னைக் கொண்டு செல்ல வைத்த உன்னை எப்படி மறக்க முடியும்?

அவள் நினைவுகளில் தத்தளித்தபடி… தன் சேட் பொக் கற்றுக்குள் இருந்த பேர்சை எடுத்து அதற்குள் இருந்த நிலாவின் படத்தை எடுத்துப் பார்த்தவனும்… அதை நெஞ்சோடு அணைத்தபடி அருக்கில் இருந்த மரத்தோடு சாய்ந்து கொண்டான் நிலவன்…
படம் —– வைதேகி காத்திருந்தாள்
பாடல் —- காத்திருந்து காத்திருந்து……

அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால்…?


வாங்கிய பொருட்கள் யாவும் சரியாக வாங்கினேனா?… என மீண்டும் சரிபார்த்துக் கொண்ட சிவா… பொருட்கள் எல்லாவற்றையும் காரில் ஏற்றி விட்டு காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான்.

நாளைய பொழுது… ம்… விடிந்தால் முதலாளியின் மகள் ராதாவின் நிச்சயதார்த்தம். அந்த வீடே குதூகலத்தில் மூழ்கிக் கிடந்தது.

முதலாளியின் இரண்டு ஆண் பிள்ளைகளும் தங்கை ராதாவின் நிச்சயதார்த்தத்துக்காக வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள்.

பெண் பிள்ளை இல்லையென்று பல வருடங்கள் தவமாய்த் தவமிருந்து… அதன் பின் பிறந்தவளே ராதா.

ம்… அந்த வீட்டு குலவிளக்கான… அழகும், அறிவுமுடைய ராதாவின் நிச்சயதார்த்தம் என்றால் சும்மாவா என்ன…?

ம்… ஒரே கொண்டாட்டம்தான். அவர்கள் வீட்டில் மட்டுமா கொண்டாட்டம்? இல்லை இல்லை.

அந்த ஊருக்கே கொண்டாட்டம்தான்.

முதலாளி ராமுவின் பெயர் சொன்னாலே அந்த ஊரில் அவ்வளவு மரியாதை. எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாது உதவி செய்யும் குணமும், தாராள மனமும் படைத்தவர் ராதாவின் அப்பா ராமு. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கூட அளவிலா ஆனந்தத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

சிவா… முதலாளி ராமுவின் வீட்டில் நான்கு வருடங்களாக கார் டிறைவராக வேலை செய்கிறான். தந்தையை இழந்த இவன் தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தவன்.

நாளாந்தம் கூலி வேலை செய்து கிடைக்கும் அந்தப் பணத்தில்தான் அன்றாடம் தன் மகனின் வயிற்றையும், தன் வயிற்றையும் கழுவி வந்தாள் அவனின் தாய்.

வறுமை துரத்தி விரட்ட… அவனின் தாய் நோய்வாய்ப்படவும்… படிப்பில் திறமையிருந்தும் படிப்பைத் தொடர முடியாமல் வேலை தேடி அலைந்த போது முதலாளி ராமுவின் இரக்க குணத்தால் அவர் வீட்டில் கார் டிறைவர் ஆனான்.

வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களில் அவனின் தாயும் இறந்து விட… யாருமற்று தவித்த அவனுக்கு ஆறுதல் கூறி… தன் பிள்ளை போல்… சிவாவின் மேலும் அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்தவர்தான் முதலாளி ராமு.

சிவா… மனம் குழம்பிய நிலையில் வேகமாக காரை ஓட்டினான். அவன் மனம் அமைதியின்றி அழுது புலம்பிக் கொண்டிருந்தது.

“இன்று காலை ராதா கேட்ட வாக்கிற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும். என்ன முடிவை எடுப்பது?”… என்று தெரியாமல் அவனின் மனம் போராட்டத்தில் தவித்தது.

“சிவா… நான் உங்கள மூண்டு வருசமா காதலிக்கிறன். உங்க பின்னால குட்டி போட்ட நாய் போலச் சுத்திச் சுத்தி வந்து… நான் எத்தின தரம் என் வெக்கத்தை எல்லாம் விட்டு என் காதலைச் சொன்ன போதெல்லாம்… நீங்க பதிலே சொல்லாம என்னை பேசிப் போட்டு போவீங்கள். இண்டைக்கு கடைசியா கேக்கிறன்… நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம். உங்களையே நினைச்சு… உங்கள மட்டுமே என் நெஞ்சில சுமந்து… இதனை வருசமா என் நெஞ்சில வளர்த்த காதலை என்னால தூக்கி எறிந்து போட்டு… உங்கள மறந்து இன்னொருவருடன் எப்பிடி வாழ முடியும் சிவா?”….

“சிவா!… என்னைக் காதலிக்கிறன் எண்டு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா?… எங்கட காதலை வீட்டில சொல்லி… அவர்கள் ஏற்றுக் கொண்டால் வாழுவம். இல்லாட்டி சாவிலாவது ஒன்று சேருவம்”… இதற்காவது பதில் சொல்லுங்க சிவா…

என்று விம்மலுடன் தன் வேதனையைக் கொட்டித் தீர்த்தாள் ராதா.

“ராதா!… உனக்கும் எனக்கும் என்ன பொருத்தம் இருக்கு? உன்ர அழகென்ன? உன்ர வசதி என்ன? இதற்கு எப்படி பெரியவங்கள் சம்மதம் சொல்வார்கள்?… கொஞ்சமாவது யோசிச்சியா?… ஆரம்பத்தில இருந்து அடிச்சடிச்சு எத்தனை தரம் சொல்லியும் நீ கேட்டியா?”…. என்றான் சிவா.

“சிவா!… உங்க மனசில நானில்லை… நீங்க என்னைக் காதலிக்கேல்லை… எண்டு என்ர தலையில அடிச்சு சத்தியம் பண்ணுங்க பாப்பம்… நீங்க இல்லை எண்டு சொல்லுங்கோ நான் உங்கள விட்டு விலகிறன்.”…

என்று ராதா கேட்க… பதில் ஏதும் சொல்ல முடியாது மரத்துப் போய் நின்றான் சிவா.

“பின்னேரத்துக்குள்ள நீங்கள் நல்ல முடிவா எனக்கு சொல்ல வேணும். உங்கட முடிவுக்காக நான் காத்திப்ருப்பன்.”… என்று கூறிவிட்டு அழுதபடியே ஓடிச் சென்றாள் ராதா.

ஆம்!… சிவாவிற்கும் ராதாமேல் காதல் இல்லாம லில்லை. இருந்த போதும் அவனின் நிலமைகள் யாவும், உள்ளத்தில் ஊற்றெடுத்திருந்த காதலை வெளிக்காட்ட விடாமல் தடுத்தன.

தினசரி ராதாவை பாடசாலை, ரியூசன் என ஏற்றிச் செல்லும் போதெல்லாம் ராதாவின் நடவடிக்கையில் காதலை உணர்ந்த போதும், எதுவுமே புரியாதது போல் நடித்துக் கொள்வான்.

சிவாவிற்கு அழகும், அறிவும் இருந்தாலும் ராதாவை காதலிக்கும் அளவிற்கு தனக்கு என்ன தகுதி இருக்கிறது?… என தன்னைத் தானே கேட்டு மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வான்.

கார் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. சிவா தன் கடந்த காலத்தையெல்லாம் படிப்படியாக சிந்தித்தான்.

இறுதியில் அவன் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தான்.

“நான் வேலை தேடி அலைந்த போது… எனக்கு வேலை தந்து… என் அம்மா இறந்த பின் என்னை தன் பிள்ளை போல் பார்க்கும் முதலாளிக்கு நான் துரோகம் செய்யலாமா? … அவரின் மானம், மரியாதை எல்லாவற்றையும் நான் குலைக்கலாமா?… அவர் போட்ட சாப்பாட்டின் நன்றியை மறக்கலாமா?… கூடாது… கூடாது”…. என்ற முடிவுக்கு வந்தவனாய்…

“ராதா!… என்ன மன்னிச்சுக் கொள்ளம்மா. அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால்… அந்த ஜென்மத் திலயாவது நாங்கள் ஒன்று சேர்வோம்.”…

என்று மனதிற்குள் தீர்க்கமான முடிவுக்கு வந்த சிவா, வீட்டிற்கு திரும்பும் சந்தி வந்ததை உணர்ந்தவனாய்… சடாரென விரைவாக வந்த அந்த வேகத்துடனேயே காரை திருப்பிய போது….

எதிரே வேகமாய் வந்த லொறியைக் கூட கவனிக்காது ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனும்… மிக அருகாமையில் நெருங்கியதுமே அதைக் கவனித்தான்.

ஆனால்…. வந்த வேகத்தை கட்டுப்படுத்த முயலுமுன்னேரே அவனின் கார்… அந்த லொறியுடன் பலமாக மோதியது.

“முதலாளி”… என்று கதறியபடி அவன் உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது